இலங்கை செய்திகள்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை ஆராய மற்றுமொரு ஆணைக் குழு - உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
02/20/2021ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை, பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை செயற் குழுவின் அறிக்கை ஆகியவற்றை ஆராய, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் பிரத்தியேக அறுவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன் பில, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரண, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையில் உள்ள வெளிப்படுத்தல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றையும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் வெளிப்படுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளையும் அலசி ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொறுப்பு இந்த குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு தேவையான அடிப்படைவசதிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு, ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர குழுவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இந்த 6 பேர் கொண்ட குழுவானது, இரு அறிக்கைகளையும் ஆராய்ந்து எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு சிறப்பு அறிக்கையொன்றினை தயார் செய்து வழங்க வேண்டும் என பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.