இலங்கை செய்திகள்
சுனாமி அபாயம் இல்லை - பாணமை கடலில் பூமி அதிர்ச்சி
02/20/2021அம்பாறை – பாணமை கடற்பரப்பில் 4 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளது.
இன்று முற்பகல் 11.14 மணிக்கு இந்த பூமி அதிர்ச்சி பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்தது.
பாணமையிலிருந்து 28 கிலோமீற்றர் தொலைவிலும், கும்புக்கன் ஓயா கடலுடன் கலக்கும் பொங்கு முகத்திலிருந்து கிழக்கு நோக்கி 14 கிலோமீற்றர் தூரத்திலும் இந்த பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளது.
கடலின் அடிப் பகுதியில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்தது.
அண்மைக் காலத்தில் இலங்கையை அண்மித்து பதிவான பாரிய பூமி அதிர்ச்சிப் பதிவாக இது கருதப்படுகின்றது. இதற்கு முன்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாணமை கடலில் 4.5 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஒன்று பதிவாகியிருந்தது.
எவ்வாறாயினும் இன்று பதிவான இந்த பூமி அதிர்ச்சியால் எவ்வித சுனாமி அபாயமும் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிட்டது.