இலங்கை செய்திகள்
நாளை இரவு 8 மணிக்கு தினேஷ் குணவர்த்தன உரையாற்ற ஏற்பாடு - குட்டரஸ், பச்லெட் இன்றைய முதல் அமர்வில் உரையாற்றுவர்
02/22/2021ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இன்றைய தினம் முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மனித உரிமை ஆணைாயாளரின் முதல் உரையின்போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 23 ஆம் திகதி மாலை வேளையில் அல்லது 23 ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 08.00 மணியளவில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவிருக்கின்றார். அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இம்முறை கொழும்பில் இருந்தவாறு இணைய வழியில் ஜெனிவா பேரவையில் உரையாற்றவுள்ளார்.
முதல் மூன்று நாட்கள் பிரதான ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி 12 மணிவரை நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் பல நாடுகள் உரையாற்றவுள்ளன. அதாவது பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆரம்ப அமர்வில் உரையாற்றவுள்ளனர். முக்கியமாக அமெரிக்கா சீனா இந்தியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆரம்ப அமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
அத்துடன் ஜேர்மனி, தென்னாபிரிக்கா, டென்மார், சுவீடன், ஜப்பான், பெல்ஜியம், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் பேரவை அமர்வில் உரையாற்றவுள்ளனர். மேலும் 22 ஆம் திகதி நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் லீ உரையாற்றவுள்ளதுடன் 23 ஆம் திகதி அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரைநிகழ்த்தவிருக்கிறார். இதன்போது இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டின் புதிய இராஜாங்க செயலர் அன்டனி ஜே, பிலிங்கன் மற்றும் பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் ஆகியோர் உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது.
மேலும், சீன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் 22ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதிகளில் உரையாற்றும்போது இலங்கை தொடர்பாக பிரஸ்தாபிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சீனா உரையாற்றும் போது தாம் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இதன்போது பிரஸ்தாபிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மேற்குறிப்பிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும்போது இலங்கையின் விவகாரம் குறித்தும் கருத்து வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று இந்தியாவின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இந்த பேரவையின் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதும் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றப்பட்டு இலங்கையினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 என்ற பிரேரணை பின்னர் 2017 ஆம் ஆண்டில் 34/1 என்றும் பின்னர் 2019 ஆம் ஆண்டில் 40/1 என்றும் நீடிக்கப்பட்டது. அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னைய நல்லாட்சி அரசாஙகம் அனுசரணை வழங்கியது. ஆனால் 2019 ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு அனுசரணையை மீளப்பெற்றது. அந்த வகையிலேயே இம்முறை புதிய பிரேரணை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.