New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கை மருத்துவ சங்கம் - இலங்கை பிரஜைகளுக்கு அங்கீகரிக்காத தடுப்பூசியை வழங்குவது பொறுத்தமற்றது

04/04/2021

வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களுக்குக் கூட உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் அங்கீகரிக்காததும், அதே வேளை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத ஒரு தடுப்பூசியை எமது நாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது ஒழுங்கற்ற செயற்பாடாகும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதியின்றி எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் அந்த சங்கம் சுகாதார அமைச்சை வலியுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு இலங்கை மருத்துவ சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை பிரஜைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்துவதற்கு முன்னர், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அங்கீகாரத்தினை உறுதி செய்வதற்கான தேவையை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

இலங்கையில் நீண்டகால வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்திற்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் வகிபாகம் மிக முக்கியத்துவமுடையதாகும்.

பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 2015 இல் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை நிறுவப்பட்டது.

இலங்கைக்கு கிடைக்கப் பெறும்  மருத்துவ தயாரிப்புக்கள் அவற்றின் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் என்பவற்றின்  தரங்களை உறுதி செய்வதன் மூலம் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை முக்கிய பங்கு வகிக்கிறது.

அதற்கமைய கோவிட் 19 இன் பரவல் சூழலில், தடுப்பூசிகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்வதற்கும், இலங்கையில் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான அறிவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஒரு சுயாதீன குழுவை நியமித்தது.

அண்மையில் சீனாவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசியை இலங்கை பிரஜைகளுக்கு உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கவில்லை என்பதோடு , உலக சுகாதார ஸ்தாபனமும் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று அறியக்கிடைத்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட சுயாதீன வல்லுநர்கள் குழு , சைனோபார்ம் தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் தன்மை என்பவை குறித்த ஒரு முடிவுக்கு வருவதற்கு அது தொடர்பான தரவுகள் போதுமானதாக இல்லை கூறியுள்ளது.

அந்த முடிவை இரத்துசெய்து, அவசரகால பயன்பாட்டிற்காக அந்த தடுப்பூசியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று எமக்கு நம்பத்தகுந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளமை இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களுக்குக் கூட உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படாததும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாததுமான ஒரு தடுப்பூசியை எமது நாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது ஒழுங்கற்றது என்று நாங்கள் நம்புகிறோம்.

கொவிட் 19 தொற்றினை கட்டுப்பாடுத்துவதற்கு உகந்த விடயங்கள் தொடர்பில் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

வேறு எந்த வெளிப்புற செல்வாக்குமின்றி  தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் முடிவெடுப்பதற்கான சுதந்திரத்தின் பின்னணியை உறுதிப்படுத்துவது இந்த விடயத்தில் மிக முக்கியமானது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.