New year offer 2017

இலங்கை செய்திகள்

சுதர்ஷினி - மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றனர்

04/08/2021

நாட்டில் மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள், புலம்பெயர் தமிழர்களின் (டயஸ்போரா) தேவைகளுக்கேற்ப பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார்கள்.

எனினும் பயங்கரவாத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகப் பேசுவதற்கு அவர்கள் முன்வராமை கவலையளிக்கிறது என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் - 19 நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின் 13 ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் எத்தகைய பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். அதனூடாக இந்த நாட்டைப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினரிடம் கையளிக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள், புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கேற்ப பயங்கரவாதிகளையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள்.

எனினும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக்கேட்பதற்கு எவரும் இல்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தீர்ப்பு எதுவாக இருப்பினும், நான் இழந்தவற்றை மீளப்பெற முடியாது.

பயங்கரவாத செயற்பாடுகளின் விளைவாக என்னைப்போன்று கணவனை, பிள்ளையை, உறவினர்களை இழந்த பலர் இருக்கின்றார்கள். எனினும் அவர்கள் சார்பாகப் பேசுவதற்குத் தற்போது மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் முன்வராமை கவலையளிக்கிறது என்றும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாகவே ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின் நினைவுதின நிகழ்வு சாதாரணமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

இந்நிகழ்வில் மகாசங்கத்தேரர்கள், கத்தோலிக்க மற்றும் ஏனைய மதத்தலைவர்கள், முன்னாள் அமைச்சர் டுலிப் விஜேசேகர உள்ளிட்டோரும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.