New year offer 2017

கனடா செய்திகள்

கனடா இரட்டைத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

09/03/2018

கனடாவின் பிரம்ப்டன் (Brampton) நகரில் இரு வேறுபட்ட இடத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிரம்ப்டன் நகரின் கார்ஃபீல்ட் க்ரசென்ட், கெனடி வீதிக்கு அருகிலும் நேற்று இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கிணங்க, குறித்த வீதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஆணும் பெண்ணும் கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் குறித்த ஆண் (வயது-27) உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். காயமடைந்த பெண் (வயது-28) உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், காரின் கண்ணாடியில் துப்பாக்கிக் குண்டுகளினால் ஏற்பட்ட துளைகளும் காணப்பட்டதாகவும் கார் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென்றும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் நடத்தப்பட்ட பிறிதொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 33 வயதான ஆணொருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இரு துப்பாக்கித்தாக்குதல்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதென்றும், இரு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.