New year offer 2017

கனடா செய்திகள்

73 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம்

09/23/2018

மனித குலத்தின் மிகப் பழமையான ஓவியம் ஒன்றினை தென்னாப்பிரிக்காவில், கண்டெடுக்கப்பட்ட மிகச் சிறிய பாறைத் துண்டின் மீது கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சுமார் 73 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஓவியம், ஒரு கல்லின் மீது குறுக்குக்கோடு போன்று சிவப்பு நிறக்களிமண் கலவையைக் கொண்டு வரையப்பட்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகருக்குக் கிழக்கே சுமார் 300 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள ‘ப்லோம்போஸ்’ குகையில் இந்தப் பாறை ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹேஸ்டேக் வடிவில் காணப்படும் அந்த ஓவியத்தின் சிறு துண்டைக் கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்தின் ‘முந்தைய மனிதர்களின் அறிவாற்றலுக்கு ஒரு முக்கிய உதாரணம்’ என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பழமையான ஓவியங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த ஓவியம் தான் ஆதிகால அரூப ஓவியம் என ‘நேச்சர்’ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாறையின் மீது இந்த ஓவியத்தை வரைவதற்கு ‘களிமண்ணால் செய்யப்பட்ட நிறமியை வண்ணம் தீட்டும் கோல்’ கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் குகையில் சிவப்பு நிறக் களிமண்ணால் சுற்றப்பட்ட மணிகள், செதுக்கப்பட்ட களிமண் துண்டுகள் ஆகியனவும், பழமையான சாயம் தயாரிக்கும் தொகுப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

அறிவியலில் ஹோமோசெபியன்ஸ் என்றழைக்கப்படும் தற்கால மனிதர்கள், தற்போதைய ஆபிரிக்காவில் 3,15,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகப் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கூறப்பட்டிருப்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.