New year offer 2017

கனடா செய்திகள்

ஹாங்காங் போராட்டத்தின் எதிரொலி 209 விமானச் சேவைகள் ரத்து

08/05/2019

ஹாங்காங்கில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக 209 விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

South China Morning Post இன்று வெளியிட்டிருந்த தகவல்படி, ஹொங்கொங் விமான நிலையத்துக்கான இருவழி விமானச் சேவைகளும் அதில் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில், நாளைய தினத்திற்கான 10 விமானச் சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் என்றும் காணாத வகையில் ஹொங்கொங்கில் நிலைமை மோசமடைந்து வருகின்றது.

சாதாரண வீதிப் போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடையக் கூடும் என்பதுடன், ரயில் சேவையிலும் தடை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பையும், முக்கியமான தொழிற்சாலைகளையும் முடக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் போராட்டம் அமையக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர்களைச் சீனாவுக்கு அனுப்பி விசாரிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் தொடர்பில் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

20 தொழிற்சாலைகளைச் சேர்ந்த சுமார் 14,000 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எட்டு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாட்டாளர்கள் அனுமதி கோரியுள்ளனர். அந்த வகையில் மூன்று இடங்களில் போராட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

எட்மிரல்டி, வொங் டாய் சின், துவென் மன் (Admiralty, Wong Tai Sin, Tuen Mun) ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி போராட்டங்களை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை தவிர்த்த வேறு சில முக்கியமான பகுதிகளிலும் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.