கனடா செய்திகள்
கனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடிய மூத்த அதிகாரி
09/15/2019கனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ராயல் மவுன்டட் பொலிஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் கமிஷனர் பாப் பால்சன் என்பவரின் ஆலோசகராக இருந்தவர் கேமரூன் ஆர்டிஸ். மூத்த உயர் அதிகாரியான இவர், புலனாய்வு துறை செயல்பாட்டை தன்வசம் வைத்திருந்தார்.
அண்மையில், இவர் நாட்டின் பல உளவு ரகசியங்களை திருடி, ரகசியமாக பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் ‘லிங்குடு இன்’ என்ற சுய விவர பட்டியல் உள்ள சமூக வலைதளத்திலும், அவர் சீனாவில் அதிகம் பேசப்படும் மாண்டரின் என்ற மொழி தனக்கு தெரியும் என பதிவிட்டிருந்தார்.
சீனாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொழில் ரீதியாக பல கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், ஆர்டிஸ் அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியிருக்க கூடும் என அஞ்சப்பட்டது.
அதனடிப்படையில், விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள், கடந்த வியாழக்கிழமை அவரை கைது செய்து, கனடாவின் கிரிமினல் சட்டம் மற்றும் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 வழக்குகளை பதிவு செய்தனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, நாட்டின் ரகசிய தகவல்களை திருடியும், முக்கிய ஆவணங்கள் பதுக்கி வைத்தும், கூடுதல் விவரங்களை சேகரித்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ‘ஐந்து கண்கள்’ என்ற உளவுத்துறை அமைப்பில் கனடாவும் ஒரு உறுப்பு நாடாக உள்ளது.
அண்மையில் அமெரிக்காவின் கைது வாரண்ட் உத்தரவை அடுத்து, சீனாவை சேர்ந்த தொழில்நுட்பனர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னரே, சீனா மற்றும் கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.