கனடா செய்திகள்
கனேடிய பிரதமரின் சிறுவயது தவறை மன்னிக்கத் தயாராகிவிட்ட சிறுபான்மையினர்
09/21/2019கறுப்பு நிறத்தவர் போன்று வேடமணிந்த காட்சிகள் வைரலானதை அடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கேட்டு விட்ட நிலையில், அவரை அந்நாட்டின் சிறுபான்மையினர் மன்னிக்கத் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பணியாற்றிய போது ஜஸ்டின் ட்ரூடோ, கறுப்பினத்தவரைப் போல் வேடமணிந்த படத்தை, தற்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சமயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது.
கறுப்பினத்தவரை அவமதித்துவிட்டதாகவும், ஆட்சி செய்ய தகுதியற்றவர் என்றும் ட்ருடோவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் ஸ்கீர் விமர்சித்தார்.
தன்னை கூட்டாளியாகக் கருதிய சிறுபான்மையினரை மனம் தளரச் செய்துவிட்டதாக வேதனைப்பட்ட ட்ரூடோ மன்னிப்பும் கோரினார்.
இது அயல்நாட்டுப் பத்திரிக்கைக்கு பெரிய வெடிகுண்டாகத் தெரிந்தாலும், ட்ரூடோவுக்கு முன் அது எடுபடாமல், மாறாக அவருக்கு அனுதாபத்தைப் பெற்றுத் தந்துவிட்டதாக டொரன்டோ பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் நெல்சன் வைஸ்மேன் கூறியுள்ளார்.
கனடா வரலாற்றிலேயே அமைச்சரவையில் இனம், பாலினப் பாகுபாடின்றி இடமளித்தவர் ட்ரூடோ என அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோ தற்போது இல்லை என்பதாலும், அதற்காக அவர் எவ்வளவு வருத்தப்படுகிறார் என்பது தனக்கு தெரியும் என்றும் சீக்கியரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் கருத்து கூறியுள்ளார்.
அனைவரும் சிறு வயதில் தவறுகள் செய்வது இயல்பே என்றும், அதை திருத்திக் கொண்டபின் குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் மேலும் சில சிறுபான்மையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.