New year offer 2017

கனடா செய்திகள்

சூடு பிடிக்கும் கனேடிய தேர்தல்: கருத்துக் கணிப்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பின்னடைவு என்ன காரணம்

09/26/2019

கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான அண்மைக் கருத்துக் கணிப்புகளில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ட்ரூடோவின் பரிந்துரையின் பேரில், கனடா நாடாளுமன்றம் கடந்த 11-ஆம் தேதி கலைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியே, இந்த முறையும் மீண்டும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

எனினும், கடந்த 2002-ஆம் ஆண்டில் தனியார் பள்ளி ஆசிரியராக இருந்த போது, பள்ளி நிகழ்ச்சியொன்றில் கருப்பினத்தவர்களை கேலி செய்யும் வகையிலான வேடமணிந்து ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற படம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, பொது மன்னிப்பு கேட்ட ட்ரூடோ தாம் தற்போது முற்றிலும் மாறி விட்டதாகவும், அனைத்து இனத்தவரையும் சமமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது, அந்த நிகழ்ச்சிக்கு முன்னரே கருப்பினத்தவரைப் போல் வேடமிட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, 1990-களில் அவர் கருப்பினத்தவரைப் போல் வேடமிட்டிருந்த படங்களும் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து, அபாகஸ் டேட்டா என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், ஜஸ்டின் ட்ரூடோவின் பொது மன்னிப்பை 76 சதவீத கனடா நாட்டவர்கள் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்ஸாஸ், ஆங்கஸ் ரீட், எகோஸ் ஆகிய ஆய்வு அமைப்புகள் செவ்வாய்க்கிழமை நடத்திய கருத்துக் கணிப்பில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியைவிட 5 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் லிபரல் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அந்தக் கட்சியை இரண்டாவது இடத்திலிருந்த கன்சர்வேடிவ் கட்சி முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆங்கஸ் ரீட் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பினத்தவர்களை கேலி செய்யும் வகையில் ஜஸ்டின் ட்ரூடோ வேடமிட்ட படங்கள் வெளியானது அவரது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், அது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இனி வரும் காலங்களில் தெரிய வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.