கனடா செய்திகள்
கனடாவின் பொருளாதார மேம்பாடு குறித்து துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை
10/15/2019கனடாவின் அரசியல் தலைவர்கள தேர்தல் பிரச்சாரங்களில் மட்டும் பொருளாதார சிக்கல்கள் குறித்து பேசிவிட்டு ஒதுங்கக் கூடாது. நீண்டகால பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வணிகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
கனடாவின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் வேகம் 1.8 வீதம் என கனடா வங்கியால் மதிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் மக்கள் தொகை அதிகரிக்கும் விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. பல கனேடியர்கள் பொருளாதார ரீதியாக வளம் பெறவில்லை என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நான் கவனித்த வரையில் நான்கு பிரதான கட்சிகளில் எதுவுமே பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு உருவாக்குவது? வருமானத்தை ஈட்டும் வழிகள் என்ன? என்பது குறித்துப் பேசவில்லை என என்று பென்னட் ஜோன்ஸின் மூத்த ஆலோசகரும்; கனடா வங்கியின் முன்னாள் ஆளுநருமான டேவிட் டாட்ஜ் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது கட்சித் தலைவர்கள் கைத்தொலைபேசி கட்டணங்களை குறைத்தல், வரிகளைக் குறைத்தல் போன்ற விடயங்கள் குறித்தே கனேடிய வாக்களர்களுக்கு அதிக வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தீர்வு காணும் வகையில் உற்பத்தித்திறனை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு பல்வேறு துறைகளில் அரசு மற்றும் தனியார் முதலீடுகள் அதிகரிக்ககப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கனேடிய முதலாளிகளில் மூன்றில் இருவர் வியாபார அபிவிருத்திக்கு கனேடிய அரசு உதவுவதில்லை எனக் கூறுகின்றனர்.
இந்நிலை முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்தும் எனவும் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.