கனடா செய்திகள்
கனடாவில் இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை!
01/21/2022கனடாவின் ஒன்ராறியோ மாகணத்தில் சொந்த சகோதரரை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கில் இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தின் கேம்பிரிட்ஜ் நகரில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்த வழக்கில் 30 வயதான சந்தீப் ஜஸ்ஸல் என்பவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டு, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி, அவருக்கு முதல் 10 ஆண்டுகள் பிணை மறுக்கப்பட்டுள்ளதால், அதன் பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜஸ்ஸல் மற்றும் அவரது சகோதரர் 26 வயதான அஜய் குமார் ஆகிய இருவரும் Conestoga கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். சம்பவத்தன்று, அஜய் குமார் தமது நான்கு நண்பர்களுடன் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்ற ஜஸ்ஸல், குமாரின் அனுமதியுடன் அவரது அறையில் தங்கியுள்ளார்.
இதே வேளை குமாரின் எஞ்சிய நண்பர்கள் நால்வரும் மூன்றாவது மாடியில் இருந்துள்ளனர். இரவு சுமார் 9.55 மணியளவில் குமாரின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
பதறிய நண்பர்கள் நால்வரும் குமாரின் அறைக்கு சென்ற போது, ஜஸ்ஸல் கத்தியால் தமது சகோதரரை தாக்குவதை பார்த்துள்ளனர். மருத்துவர்கள் அளித்த அறிக்கையில், குமாரின் உடலில் 97 முறை ஜஸ்ஸல் கத்தியால் குத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தீர்ப்பு வாசிக்கும் முன்னர், தமது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் ஜஸ்ஸல். இருப்பினும் அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டிருந்ததால், அவருக்கு சட்ட விதிகளின் படி ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
ஜஸ்ஸலின் குடும்பத்தினர் அனைவரும் இந்தியாவில் இருப்பதால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என சட்டத்தரணிகள் தரப்பில் கூறப்படுகிறது.