கனடா செய்திகள்
கனடாவில் போராட்டக்காரர்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
02/21/2022கனடா தலைநகர் ஒட்டாவாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் நிச்சயமாக பொருளாதார தடை மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தலைமை காவல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
கனடாவில் இருந்து அமெரிக்க எல்லையை கடக்கும் அனைத்து லொறி சாரதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பை எதிர்த்து கனடாவில் வெடித்த போராட்டம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களை தண்டியுள்ளதால், இதனை கட்டுப்படுத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நகரின் முக்கிய பகுதியில் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டு, போராட்டக்காரர்களை உடனடியாக கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டது. அதன்போது 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களது வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனடாவின் தலைமை காவல் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒட்டாவாவில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் பொருளாதார முடக்கம் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் போன்றவை நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் போராட்டக்காரர்களை வெளியேற்றும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், வேண்டுமென்றால் சிறிது காலம் எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கலைந்து செல்லாத போராட்டக்காரர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி இந்த உத்தரவுகளை தொடர்ந்து, சில போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய பகுதியில் இருந்து கலைந்து சென்றாலும், பெரும்பாலான போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை அமைதியான முறையில் வெளியேற்றும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர்.