New year offer 2017

கனடா செய்திகள்

சிறப்பு விமானத்தில் கனடாவுக்கு அழைத்து வரப்படும் 3 உக்ரைன் குழந்தைகள்: வெளியான தகவல்

03/23/2022

கனடாவின் ரொறன்ரோவில் மேலும் 3 உக்ரேனிய குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் உக்கிரமாக நடந்துவரும் நிலையில், மில்லியன் கணக்கிலான மக்கள் உயிர் பயத்தில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

இருப்பினும் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் உக்ரைன் நகரங்களில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறார்களுக்கான மருத்துவமனையில் 3 சிறார்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக தனி விமானத்தில் அழைத்துவரப்பட உள்ளனர்.

ஏற்கனவே 2 உக்ரேனிய சிறார்கள் குறித்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 சிறார்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

மட்டுமின்றி, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இவர்கள் தனி விமானத்தில் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவக் குழுக்கள் ஏற்கனவே அந்த நோயாளிகள் தொடர்பில் உரிய ஆய்வு முன்னெடுத்துள்ளதாகவும், தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, குறித்த சிறார்களின் குடும்பங்களும் கனடாவில் தங்கிக்கொள்ள அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ரொறன்ரோ மருத்துவமனையானது உக்ரைனில் இருந்து 10 முதல் 15 சிறார்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் மூலம் மேலும் அதிக எண்ணிக்கையிலான சிறார்களை சிகிச்சைக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.