New year offer 2017

இலங்கை செய்திகள்

வாசுதேவ - இலங்கையின் தடுப்பூசி விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் தலையிட வேண்டும்

06/10/2021

அஸ்ட்ராசெனிகா முதலாவது தடுப்பூசியை பெற்றவர்கள் தற்பொழுது அதன் இரண்டாவது தடுப்பூசியை பெறமுடியாமல் இருக்கின்றனர்.  இந்தத் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடி உள்ளபோதும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அதனால் இந்த விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் உடனடியாகத் தலையிட்டு தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தடுப்பூசியாக இந்தியாவில் இருந்து பெறப்பட்ட அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி முதலாம் கட்டமாக ஏற்றப்பட்டவர்களுக்கு அதன் இரண்டாம் கட்டம் ஏற்றுவதற்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. இதனை பெற்றுக்கொள்ள தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடி இருக்கின்றபோதும் இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

குறிப்பாக தேவையைவிட அதிகமாக இந்த தடுப்பூசியை வைத்துள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளவும் கலந்துரையாடி இருக்கின்றோம்.

அத்துடன் தனியார் துறையில் ஒருசில வர்த்தகர்கள் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி ஒரு சிறு தொகையை பெற்றுத்தருவதாக அரசுடன் கலந்துரையாடி இருக்கின்றனர்.

எமக்கு அது தொடர்பில் நம்பிக்கையில்லை. ஏதாவது ஒரு அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி நிறுவனமொன்று இது தொடர்பில் உறுதிப்படுத்தாமல் அதனை எமக்கு நம்ப முடியாது. எமக்கு பாதுகாப்பான அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியே தேவை.

இதனைப் பெற்றுக் கொள்வதற்காக உள்ள அனைத்து சட்ட ரீதியான முறைகளையும் நாம் பார்க்கின்றோம். என்றாலும்  உலக சுகாதார ஸ்தாபனம் இதனை கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

எமது நாட்டுக்கு அஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசி இந்தியாவினால் கிடைக்கப்பெற்றது. அதன்போது இரண்டாம் கட்ட தடுப்பூசியை தருவதாக இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும் இந்தியாவில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக அந்த விநியோகத்தை திட்டமிட்டது போன்று மேற்கொள்ள முடியாமல் போனது. எமக்கு இதனை புரிந்து கொள்ள முடியும்.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் உடனடியாக இது தொடர்பில் நிபுணர்களை அழைத்து, மாநாடு ஒன்றை நடத்தி இந்தப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட வேண்டும்.

இலங்கையில் அஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் சுமார்  6 இலட்சம் பேர் அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசி இல்லாமல் இருக்கின்றனர். இவ்வாறு உலகில் முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பல இலட்சம் பேர் உள்ளனர். அவர்கள் தற்போது மிக கஷ்டமான நிலையில் உள்ளனர்.

அதனால்  உலக சுகாதார ஸ்தாபனம் இந்த விடயத்தில் தலையிட்டு இதனை பெற்றும் தரும் பொறுப்பை ஏற்க வேண்டும். இது மனித குலத்துக்கு எதிரான செயற்பாடாகும். இது மனித உரிமை மீறல் ஆகும்.  அத்துடன் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி அதிகளவான தொகையை, பண பலம் கொண்ட அதிகாரமுள்ள நாடுகள் வைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பாக செயற்படும் நிறுவனங்கள் இது தொடர்பில் செயற்பட்டு,  இந்த குற்றத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான உரிய அழுத்தங்களை சர்வதேசரீதியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.