New year offer 2017

இலங்கை செய்திகள்

மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள கப்ரால் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த செய்யப்போவது என்ன ?

09/15/2021

நாட்டின் பொருளாதாரம் உறுதிப்பாடான நிலையிலிருக்கின்றது என்பதை பொருளாதாரத்தில் அக்கறை கொண்டிருக்கும் அனைத்துத் தரப்பினருக்கு உணர்த்துவதன் ஊடாகவே வீணான அச்சங்களையும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதக தாக்கங்களையும் முடிவிற்குக் கொண்டுவரமுடியும்.

எனவே நிதியியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கி, அதனை அடைவதற்கான குறுங்கால வழிகாட்டல் கொள்கைத்தொகுப்பை விரைவில் வெளியிடவிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னரான முதலாவது உரையில் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று புதன்கிழமை மத்தியவங்கியில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து மத்தியவங்கியின் ஆளுநராகத் தனது ஆரம்ப உரையை நிகழ்த்திய அஜித் நிவாட் கப்ரால் மேலும் கூறியதாவது:

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கவேண்டாம் என்று பலமுறை ஜனாதிபதியிடம் கூறினேன். இருப்பினும் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக இப்போது மகிழ்வுடன் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன். மத்திய வங்கியினை மீண்டுமொருமுறை வழிநடாத்துவதனைப் பெரும் வாய்ப்பாகக் கருதும் அதேவேளை, இப்பொறுப்பினை எனக்கு வழங்குவதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் நன்றியுடன் நினைவுகூருகின்றேன். அதுமாத்திரமன்றி நாட்டுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற வாழ்த்துக்களுக்கும் நன்றி கூறுகின்றேன். 

அவர்களது எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்படாது என்றும் பொருளாதார உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதை நோக்கிய வழிநடத்தலை மேற்கொள்வேன் என்றும் உறுதியளிக்கின்றேன்.

இந்தப் பணியை முன்னெடுப்பதற்கென மத்தியவங்கியின் திறன்வாய்ந்த ஆளணியின் ஒத்துழைப்பினையும் அனைத்து ஆர்வலர்களினது ஆதரவையும் எதிர்பார்ப்பதோடு அவர்களுடனான ஆரம்ப கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளேன். நான் கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டபோதும் நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. 

அதேபோன்றுதான் இப்போதும் மொத்தத்தேசிய உற்பத்தி, தலா வருமானம், வெளிநாட்டு நேரடி முதலீடு, வெளிநாட்டுக்கையிருப்பு, ரூபாவின் பெறுமதி உள்ளிட்டவை வீழ்ச்சியடைந்திருக்கின்றது. எனவே பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், நீண்டகால அடிப்படையில் சாதக மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய கடினமான தீர்மானங்களையும் கொள்கைகளையும் வகுக்கவேண்டிய நிலையிலிருக்கின்றோம். 

வெளிநாட்டுக்கடன்களைக் குறைத்து கடனல்லாத நிதி உட்பாய்ச்சலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் விசேட அவதானம் செலுத்தவுள்ளேன்.

அரசாங்கம், வங்கித்துறையினர், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், கடன்வழங்குனர்கள், கடன்பெறுனர்கள், முதலீட்டாளர்கள், அபிவிருத்தியாளர்கள், தொழில்வழங்குனர்கள், கைத்தொழில் முயற்சியாளர்கள், பங்குப்பரிவர்த்தனை நிலையங்கள், சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நாட்டின் பொருளாதார உறுதிப்பாட்டினை உணரவேண்டும். அதன்மூலம் தேவையற்ற அச்சம் நீங்குவதுடன் பாதக தாக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளவும் முடியும்.

எனவே அந்த இலக்கை அடைந்துகொள்வதற்கு, அதிலும் குறிப்பாக தற்போதைய நெருக்கடிநிலைகளின்போது பொருளாதாரத்திற்குப் பங்களிப்பை வழங்கும் அனைத்துத் தரப்பினருக்கும் மத்திய வங்கியானது தெளிவானதும் உறுதியானதுமான வழிகாட்டல்களை வழங்கவேண்டும். அதன்படி இலங்கையின் பேரண்டப்பொருளாதாரக் காரணிகளின் சாதகமான நகர்வு தொடர்பில் அனைவருக்கும் போதிய தெளிவினை வழங்குவதன் ஊடாக நிதியியல் துறையில் உறுதிப்பாட்டினை ஏற்படுத்துவதே மத்திய வங்கியின் ஆளுநர் என்றவகையில் எனது முதன்மையான நோக்கமாகும்.

இந்த நோக்கத்தை அடைவதற்கான பயணத்தில் மத்திய வங்கி அதன் அர்ப்பணிப்பினைப் பிரதிபலிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. ஆகவே அதற்கேற்றவாறான குறுங்கால வழிகாட்டல் கொள்கைத் தொகுப்பொன்றை வெளியிடவிருப்பதுடன் அது அனைத்துப் பொருளாதார ஆர்வலர்களுக்கும் பயனளிப்பதாக அமையும் என்று தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமனம் பெற்றிருக்கும் அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதியிலிருந்து நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில் முயற்சியாண்மை இராஜாங்க அமைச்சராகப் பதவிவகித்தார். அதேவேளை 2019 நவம்பர் தொடக்கம் 2020 ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராகவும் செயற்பட்டார்.

அத்தோடு கடந்த 2006 ஜுலை தொடக்கம் 2015 ஜனவரி வரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் 12 ஆவது ஆளுநராகவும் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், தேர்ச்சிபெற்ற தொழில்சார் பட்டயக்கணக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது.