New year offer 2017

இலங்கை செய்திகள்

அரசியல் தீர்வுக்கு அமெரிக்க - இந்திய கூட்டு பங்களிப்பை நாடுகிறது கூட்டமைப்பு

11/28/2021

இலங்கையில்  தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்காண இந்தியாவுடன் இணைந்து ஊக்கத்தை கொடுக்குமாறு அமெரிக்காவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

வொஷிங்டனில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டநிபுணர்கள்  தூதுக்குழு அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த தூதுக்குழுவில் மூத்த சட்ட நிபுணர்களான கே.கனக ஈ.ஈஸ்வரனும் நிர்மலா சந்திரஹாசனும் அடங்கியிருந்தனர்.அவர்கள் மூவருமே அமெரிக்க அதிகாரிகளிடம் இந்த வேண்டுகோளை விடுத்தனர்.

 

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணையவிருக்கும் நிலையில், தீர்வு காணப்படாமல் இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிப் பிரச்சினைகளுடன் சேர்த்து தமிழ் தேசிய பிரச்சினைக்கு  அரசியல் தீர்வொன்றை வொஷிங்டன் வலியுறுத்த வேண்டியது முக்கியமானதாகும் என்று சுமந்திரன் லண்டனில் இருந்து ' த இந்து ' வின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனிடம் தெரிவித்திருக்கிறார்.

 அமெரிக்காவில் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்ட சுமந்திரன் லணடன் சென்று பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் கலந்தாலோசனையை நடத்தினார்.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான மைய குழுவுக்கு ஐக்கிய இராச்சியம் தலைமை தாங்குகிறது.

ஜெனீவாவில் உள்ள பேரவையில் 2022 மார்ச்சில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவிருக்கிறார்.

நீண்டகால உள்நாட்டு போரில் இருந்து இன்னமும் மீண்டுகொண்டிருக்கும் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காக பேச்சுக்களில் பங்கேற்கும் பிரதான சர்வதேச பங்காளியாக இதுவரையில் இந்தியாவே விளங்கும் அதேவேளை மேற்குலக வல்லாதிக்க நாடுகள் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பிலேயே அக்கறை காட்டுகின்றன.

 புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கான  ராஜபக்ச அரசாங்கத்தின்  முயற்சிகளுக்கு மத்தியில் அரசியல் தீர்வொன்றுக்கான அவசர கோரிக்கைக்கு வலுச்சேர்க்க அமெரிக்காவை அழைக்கும் கூட்டமைப்பின் நகர்வு இடம்பெற்றிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.அதன் காரணத்தினால்தான் அரசியலமைப்பு வரைவு துறையில் நிபுணத்துவம் கொண்டவர்களை முழுவதுமாகக்கொண்ட தூதுக்குழு அமெரிக்கா சென்றது.

 

  2009 ஆண்டில் உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு நீதியான அரசியலமைப்பு இணக்கப்பாடு ஒன்றின் ஊடாக நிலையான அரசியல் தீர்வொன்றை காணவேண்டும் என்பதே  கூட்டமைப்பின் குறிப்பாக அதன் தலைவரான முதுபெரும் அரசியல்வாதி இரா.சம்பந்தனின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

1987 ஜூலை  இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாக கொணடுவரப்பட்ட இலங்கை அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் ஒரு அவசியமான நடவடிக்கை ஆனால் போதுமானதல்ல என்பதே கூடடமைப்பின் நிலைப்பாடாகும்.மாகாணங்களுக்கு ஓரளவு அதிகாரங்களை உறுதிப்படுத்துகின்ற அந்த திருத்தத்தை இலங்கை அரசாங்கங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

"  மாகாணங்களுக்கு போதுமான அதிகாரங்களை பரவலாக்கம் செய்யாமல்  தொல்லியல் அல்லது சூழல் பாதுகாப்பு செயற்திட்டங்களின் வடிவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி வடக்கு கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றும் அரசின் பாரிய  முயற்சிகளை எம்மால் தடுக்கமுடியாது"என்று சுமந்திரன் சொன்னார்.

 

  இந்தியாவின் கோரிக்கைகள்

 

  13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.அத்துடன் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தவேண்டும் என்பதே இந்தியாவின் தொடர்ச்சியான கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால்,புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்கு முன்னதாகவும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச உறுதியளித்த தேர்தல் சீர்திருத்தங்களை செய்வதற்கு முன்னதாகவும் இலங்கை அரசாங்கம் ஒன்பது மாகாணங்களுக்கும் தேர்தல்களை நடத்துமா என்பது தெளிவாக தெரியவில்லை.