New year offer 2017

இலங்கை செய்திகள்

வடிவேல் சுரேஷ் - 12 இலட்சத்தும் தோட்டத்தொழிலாளர்கள் இன்று வெறுமனே ஒரு இலட்சம் பேராக குறைந்துள்ளனர்

11/28/2021

அரசாங்கம் 1989 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை கம்பனிகளுக்கு கொடுக்கும் வேளையில் 12 இலட்சத்து 448 தோட்டத்தொழிலாளர்கள் பணியாற்றினார். 

ஆனால் இன்று வெறுமனே 1 இலட்சத்து 44 ஆயிரத்து 828தோட்டத்தொழிலாளர்களே உள்ளனர். 

அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருகின்ற சகல சந்தர்ப்பத்திலும் நிறுவனங்களை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனரே தவிர தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்தவில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற பெருந்தோட்ட அமைச்சு ,காணி அமைச்சு மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சுக்கள் மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் 1989 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை கம்பனிகளுக்கு கொடுக்கும் வேளையில் 12 இலட்சத்து 448 தோட்டத்தொழிலாளர்கள் பணியாற்றினார். 

ஆனால் இன்று வெறுமனே 1 இலட்சத்து 44 ஆயிரத்து 828தோட்டத்தொழிலாளர்களே உள்ளனர். 

நிலப்பரப்பு காடாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பு மட்டும் காரணமல்ல. சகல அரசாங்கங்களும் இதற்கு பொறுப்பு கூறியாக வேண்டும். முறையான நிருவாகமும், முன்னேற்றமும் இல்லாத நிலையில் தொழிலாளர்கள் இந்த தொழிலை வெறுத்துள்ளனர்.

அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருகின்ற சகல சந்தர்ப்பத்திலும் நிறுவனங்களை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனரே தவிர தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்தவில்லை.

இன்று  நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு காணிகளை கொடுக்கும் நிலைமைக்கு அவர்கள் பலமடைந்துள்ளனர். 

மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கையில் அரசாங்கள் நிறுவனங்களுடன் பேரம்பேசும் நிலைமையே உருவாகியுள்ளது.

தேயிலை தொழிற்சாலைகள் விற்கப்படுகின்றன, அரச உடைமைகள் விற்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் சிலோன் டீயை எவ்வாறு பலப்படுத்துவது. தேயிலை துறையின் வளர்ச்சியை கருத்தில் கொள்ள நடவடிக்கை எடுக்காது துறையையே நாசமாக்கும் நடவடிக்கைகலையே எடுக்கின்றனர்.

சம்பள உயர்வை கூறி தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்கும் வேளையில் அமைச்சருக்கு எதிராகவே வழக்கு தொடுக்கும் நிலைக்கு கம்பனிகள் பலமடைந்தது. 

இன்று மலையகத்தில் பல பகுதிகளில் வேலை நிறுத்தம் செய்துகொண்டுள்ளனர். எனவே இந்த நிலைமைகளை நிறுத்தியாக வேண்டும், மக்களின் நலன்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இல்லை, அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆர்வமாக யாருமே இந்த பணிகளில் ஈடுபடுவதில்லை. ஆகவே இந்த நிலையில் இருந்து சகலரும் வெளியில் வரும் வரையில் இந்த துறையை கட்டியெழுப்ப முடியாது என்றார்.