New year offer 2017

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த வாரம் அவரச சந்திப்பிற்கும் ஏற்பாடு - மாகாணசபை தேர்தலில் தனித்த பயணம்

11/29/2021

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயவும், கட்சியை பலப்படுத்தும் அடுத்த நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவும் அவரச சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன், அடுத்த மாகாணசபை தேர்தலில் தாம் தனித்து களமிறங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  கூட்டமொன்று கடந்த வாரம் கூடிய வேளையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதன் போது ஆராய்ந்துள்ளனர். 

எனினும் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஆளும் பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்தும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்கப்படுகின்ற நிலையில் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயவும் அடுத்த வாரம் மீண்டும் அவரச சந்திப்பொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அவரது கொழும்பு இல்லத்தில் கூடவுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தில் பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அடுத்த மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்க வேண்டும் எனவும் கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சி தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். 

அதனை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மறுக்கவில்லை எனவும், அடுத்த மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்குவது உறுதியெனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளரும் முன்னாள் செயலாளருமான ரோஹன லக்ஸ்மன் பியதாஸ கேசரிக்கு தெரிவித்தார்.