இலங்கை செய்திகள்
ஆப்கானிஸ்தனை விட கீழே சென்றுள்ள இலங்கை
01/20/2022நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போர் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளதுடன் இலங்கை அந்த நாட்டிற்கும் கீழேயே உள்ளது. இலங்கை தெற்காசியாவில் வங்குரோத்து அடைந்த நாடாக மாறியுள்ளது.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி இந்த ஆண்டும் தோல்வியடைவார். அது நிச்சயம். இதனால், தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ளுமாறு மக்களிடம் கோர முடியாது.
தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, 79 வீதமாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு ஆட்சி நாட்டுக்கு சாபமாக மாறியுள்ளது.
பணம் இருந்தாலும் பிரயோசனமில்லை. மற்றவரின் காற்சட்டையை அணிவது போல், நாங்கள் ஆரம்பித்த அதிவேக நெடுஞ்சாலைகளை திறந்து வருகின்றனர் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.