இலங்கை செய்திகள்
ரணில் புரிந்துகொண்ட தமிழர்களும் புரிந்துகொள்ளாத சிங்களவர்களும்
05/14/2022ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வீசிய ராஜபக்ச பெருஞ்சூறாவழியில் முதலில் தூக்கிவீசப்பட்டவர் ரணில் விக்ரமசிங்கதான். இனி அவருக்கு மீட்பே இல்லை, தன் சொந்தத் தொகுதியில்கூட வெல்ல முடியாத நிலைக்கு அரசியலில் சரிவைச் சந்தித்துவிட்டார் எனக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்தச் சரிவோடு அவரோடு ஒட்டியிருந்த பலரும் கட்சி மாறினார்கள். இவ்வாறு தனித்துவிடப்பட்டிருந்தவருக்குக் கட்சிக்குக் கிடைக்கவேண்டிய தேசியப்பட்டியல் என்ற ஓர் அதிர்ஷ்டம் கிடைத்தது.
ரணிலின் ஆளுமை
தேசியப்பட்டியலின் மூலம் மிகவும் தாமதமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ரணில் விக்ரமசிங்க தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை அஸ்திரமாகப் பயன்படுத்தினார். அதுவேதான் ரணிலின் ஆளுமைப் பாணி. பதற்றமின்மை, அவசரப்படாமை, பொறுமை, அவமானங்களுக்கு உணர்ச்சிவயப்படாமை, விமர்சனங்களை இயல்பாக எடுத்துக்கொள்ளல், தெளிவான தூரநோக்கு போன்ற ஆளுமைப் பண்புகளை நிரம்பப்பெற்றவரான ரணில், நிதானமாகக் காய்களை நகர்த்தினார்.
கடந்த இரண்டு வருடங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குள் பல ஆட்சிக் குழப்பங்கள், கட்சி தாவல்கள் நிகழ்ந்தபோதிலும், அவர் தனியே நின்றார். அவ்வப்போது இலங்கை எதிர்கொள்ளப்போகும் பொருளாதார இடர்கள் குறித்த தெளிவூட்டலை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் வழங்கிக்கொண்டிருந்தார்.
ராஜபக்சக்களின் ஊழல், வினைத்திறனற்ற நிர்வாகம், கொரோனா பாதிப்புகள் போன்றன சிங்கள மக்களால் சிங்கள மக்களுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட அரசாங்கம் படுதோல்விகண்டது.
இலங்கை வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத பொருளாதாரச் சரிவினால் சிங்கள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். சேமிப்பற்ற – அன்றாடம் உழைப்பதை அன்றே உண்டு, களித்து வாழும் அவர்களது வாழ்க்கை முறையை இந்தப் பொருளாதாரச் சரிவு மிகமோசமாகப் பாதித்தது. ஓரளவுக்கு அரசியல் தெளிவுள்ள சிங்கள மக்களின் நடுத்தர வர்க்கத்தினர் இந்நிலைமையை விளங்கிக்கொண்டு, இதற்கு காரணகர்த்தாக்கள் ராஜபக்சவினரே என்ற முடிவுக்கு வந்தனர்.
எனவேதான் ராஜபக்சக்களுக்கு எதிராகப் போராடத்தொடங்கினர். சமநேரத்தில் இந்தப் பேரிடரில் இருந்து தம்மை மீட்டு வரக்கூடிய ஒரே நபர் ரணில் விக்ரமசிங்கவே என்ற நம்பிக்கையையும் அவ்வப்போது வெளிப்படுத்தினர். ரணிலின் இந்த நம்பிக்கைக்கு, ரணில் விக்ரமசிங்க சர்வதேசத்துடன் கொண்டிருக்கின்ற நல்லுறவுதான் காரணம்.