New year offer 2017

இலங்கை செய்திகள்

படிப்படியாக உருவாகும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை: இலங்கையின் பல பகுதிகளில் மழை

05/16/2022

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அத்துடன் காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

இந்த கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 - 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.