இலங்கை செய்திகள்
நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுகாதார ஊழியர்கள்
06/25/2022கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று(25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் முன் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் முயற்சி
நேற்றைய தினம் (24) கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு சமூகமளித்திருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந.சரவணபவன் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சுகாதார ஊழியர்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ளவர்கள் மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி அவர்களை அவமதிக்கும வகையில் நடந்துகொண்டுள்ளனர்.
மது போதையில் இருப்பவர்கள் தொழில் அடையாள அட்டையை பரிசோதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான சம்பவங்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கு அமைவாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதார ஊழியர்களுக்கு என கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை நிறுத்தி கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையத்திற்கு மாற்றுமாரும், சுகாதார பணிப்பாளர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பணிமனையிலிருந்து பேரணியாக மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
மன்னார்
சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த கோரியும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று (25) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
அண்மைக் காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.